சென்னை அரும்பாக்கத்தில் முதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தில் முதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த நங்கநல்லூர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் மருத்துவர் சுப்பையா சண்முகம். புற்று நோய் நிபுணரான இவர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராக இருந்து வந்தார். இவருக்கு அதே குடியிருப்பில் வசித்துவரும் வயதான பெண்மணி ஒருவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பெண்மணிக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா சண்முகம் காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான பெண்மணிக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளை கொடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில் உச்சபட்சமாக பெண்மணியின் வீட்டில் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண்மணிக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் அந்த பெண்மனிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வந்த உறவினர் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலிஸில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ஆம் தேதி புகார் அளித்தார். சுப்பையா சண்முகம், அண்டைவீட்டுப் பெண்மணி வீட்டில் சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர் சுப்பையா சண்முகம் பெண்மணிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததும், சிறுநீர் கழித்ததும் உண்மை என தெரியவந்தது.

இதனையடுத்து ஆதம்பாக்கம் போலிஸார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொரோனா விதிமுறை மீறல், பொருட்கள் சேதப்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சுப்பையாவை காவல்துறை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதி மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கினார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஓத்தி வைத்தார்.