சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. வந்து இறங்கிய மாயாவதி.!உச்சக்கட்ட பதற்றத்தில் தலைநகர்
முன் விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பள்ளிக்கு சென்றவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
வட சென்னையின் முக்கிய நபராக திகழ்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம் இரவு சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டார். கொடூர தாக்குதலால் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. நேற்று பிரேதபரிசோதனை செய்யப்பட்டு ஆம்ஸ்ட்ராங் உடல் எம்பாம்பிங் செய்யப்பட்டு இரவு 11 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
8 பேர் கைது- பரபரப்பில் சென்னை
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். தனது அண்ணன் ஆற்காடு சுரேஷை கொலை செய்த உதவியதற்காக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷன் தம்பி ஆற்காடு பாலு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து கண்டனமும் கூறியிருந்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் இரங்கல் தெரிவித்திருந்தார். சென்னைக்கு வந்து அம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மாயாவதி அஞ்சலி
இதனை தொடர்ந்து செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட பள்ளிக்கு சென்றவர் அங்கு மலர் மாலை வைத்து மாயாவதி அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.