சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் வரை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்கள் சென்று வருவது வழக்கம்.

தினமும் 2 மணிநேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் இந்த மின்சார ரயில், இரவு 8.30 மணிக்கு கடைசியாக இயக்கப்படும். இதனால், இதில் நூற்றுக்கணக்கான கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை கடற்கரை ரயில் நிலைய சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் திருமால்பூர் சென்றடைந்தது. அப்போது, அதில் இருந்த ஒரு பெட்டியில் குழந்தையின் அழுகை குரல் கேட்டது. இதனால், அங்கிருந்த ரயில்வே துப்புரவு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ரயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரயிலில் சோதனை செய்து பார்த்தபோது, பிறந்த 3 நாட்களே ஆன் பச்சிளம் பெண் குழந்தை அழுது கொண்டிருப்பதை கண்டனர்.

தகவலறிந்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ரயில்வே அதிகாரிகளிடம் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் ஒப்படைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலில் பிறந்ததாள் குழந்தை வீசப்பட்டதா, ஆண் குழந்தை என நினைத்து கடத்தி வந்த பின் பெண் குழந்தை என தெரிந்ததால் ரயிலில் விட்டு சென்றனரா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.