உறுதிமொழி கடிதம் கிடைக்கும்வரை நாங்கள் ஊருக்கும் போகமாட்டோம், போராட்டமும் நடத்த மாட்டோம். இரண்டு நாட்களுக்கு அமைதியாக காத்திருப்போம் என தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம், அரை மொட்டை அடிக்கும் போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

இதையடுத்து இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேகொண்டு வருகிறேன்.எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டு கொண்டார்.

அதற்கு விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து இன்றைக்குள் முடிவு வெளியிடுவதாக அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.

அதன்படி விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தியபிறகு அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அமைச்சர்களின் பேச்சை முழுமையாக எங்களால் நம்ப முடியவில்லை.

இருந்தாலும் வெறும் கையேடு ஊருக்கு சென்றால் எங்களுக்கு அவமானம். ஆதலால் மத்திய அரசு எங்களுக்கு உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும்.

அதில், நாங்கள் வாங்கிய கடனை ஒத்திவைக்கின்றோம் என தெரிவிக்க வேண்டும்.  

இரண்டாவதாக குண்டர்களை வைத்து எங்கள் பொருட்களை ஜப்தி செய்கிறார்கள். அதை செய்யகூடாது என நிபந்தனை இருக்க வேண்டும்.

மூன்றாவது, இந்த கடன் இருக்கும்போதே எங்களுக்கு புது கடன் கொடுக்க வேண்டும்.

இதுகுறித்த கடிதத்தை பெற இரண்டு நாட்கள் இங்கயே காத்திருக்கிறோம்.

போராட்டமும் இல்லை. வீடு திரும்பவும் இல்லை. அமைதியாக காத்திருக்கிறோம்.

கடிதம் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.