ayyakannu pressmeet after meeting with cm

காவிரி மேலாண்மை வாரியம், பயிர்க்கடன் தள்ளுபடி, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர்ந்து 41 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

விவசாயிகளின் இந்த அறப்போராட்டத்தை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியம் செய்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று காலம் தாழ்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லிப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

ஆனால் அறிவித்தபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழக விவசாயி்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இந்தச் சூழலில் தலைமைச் செயலகத்திற்குச் சென்ற போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும், விவசாயிகள் வங்கியில் அடகு வைத்த தங்க நகைகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை , உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் 2 மாதத்தில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் உறுதி அளித்ததாகக் கூறினார்.

இதற்கிடையே சேப்பாக்கம் போராட்டக் களத்திற்குச் சென்ற அய்யாக்கண்ணு முதல் அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் குறித்தும் போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்தும் சக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறைாயாக செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, தமிழக அரசு அளித்த உறுதிமொழியினை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறினார்.

2 மாத காலத்திற்குள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்தார்.