ayyakannu became famous in all india level

கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் மழை பொய்த்து போனதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீர் இல்லாமல், தங்களது பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய ஏராளமானோர், கடனை திருப்பி கொடுக்க முடியாமல், தற்கொலை செய்து கொண்ட அவல சம்பவமும் தமிழகத்தில் தொடர்ந்தது.

இதற்கிடையில், விவசாயிகளின் பிரச்சனைகளை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தவர் அய்யாகண்ணு.

திருச்சியை சேர்ந்த இவர், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைத் தீர்க்கும் கூட்டத்துக்கு சென்று, அவர்களின் குறைகளை பகிரங்கமாக தெரிவித்தார். அதில், அதிகாரிகளின் அலட்சியம் குறித்து புகார் கூறினார். ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து ஒவ்வொரு கூட்டத்துக்கும் நூதன முறையில் சென்று, விவசாயிகளின் குறைகளை கொட்டி தீர்த்தார். குறிப்பாக கோவணத்துடனும், கிழிந்த சட்டையுடனும், உடலில் ஆடைகள் இல்லாமல் செடி கொடிகளை சுற்றி கொண்டு அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

இதைதொடர்ந்து, தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டது. அதன் தலைவராக அய்யாகண்ணு தேர்வு செய்யப்பட்டார்.

இதையாட்டி, ‘விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதிகள் இணைப்பு’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சார்பில் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினார்.

அய்யாகண்ணுவின் நூதன போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உத்தரபிரதேசம், பஞ்சம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவரது இந்த போராட்டத்துக்கு அனைத்து கட்சியினர், சமூக அமைப்பினர், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தலைவர்களிடம் பேசியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் 20 விவசாயிகள் டெல்லி சென்றனர்.

ஏற்கனவே போராட்டம் நடத்திய ஜந்தர் மந்தர் பகுதியில் அவர்கள் முகாமிட்டனர். அங்கு உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும் வந்து சேர்ந்தனர்.

இதைடுத்து, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் அருகில் உள்ள குருநானக் கோவில் வளாகத்தில் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்காக ‘அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் வட இந்திய தலைவராக உத்தரபிரதேச மாநில விவசாயிகள் சங்க தலைவர் வி.எம்.சிங் தேர்வு செய்யப்பட்டார். தென் இந்திய தலைவராக அய்யாக்கண்ணு தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு உள்பட 5 பிராந்தியங்களுக்கு தலைவர்களும், 21 செயலாளர்கள், 150 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் ஜூன் 9ம் தேதி டெல்லியில் மீண்டும் கூட்டம் நடைபெறும். அதில் அகில இந்திய அளவில் நடத்தப்போகும் போராட்டம் குறித்து அப்போது, அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தென் இந்தியாவின், தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி வந்த அய்யாகண்ணு, தமிழக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு மட்டுமே அறிந்தவராக இருந்தார்.

ஆனால், டெல்லியில் மண் சோறு சாப்பிடுவது, அரை நிர்வாணம், முழு நிர்வாணம், மனித எலும்பு கூடுகளுடன் பேரணி உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி, மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடியும் அறிந்து கொள்ளும் வகையில் அய்யாகண்ணு பிரபலம் அடைந்துவிட்டார்.

சாதாரண விவசாயி என கூறி போராட்டம் நடத்தி அய்யாகண்ணு ‘அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தென்னிந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சாதாரண தமிழக விவசாயி, இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக போராடும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அவருக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பெருமை சேர்க்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.