டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜாதான் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

டெல்லி, ஜந்தர் மந்தரில், விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த நிலையில், அய்யாக்கண்ணு நேற்று திருச்சி வந்தார். டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அய்யாக்கண்ணுவின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. இதையடுத்து, அய்யாக்கண்ணு நேற்று திருச்சி வந்தார்.

மனைவியை பார்த்து விட்டு மீண்டும், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மீண்டும் டெல்லி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என்றார். மேலும், போராட்டத்துக்கு பாஜகவைத் தவிர மற்ற கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஆதரவு அளிப்பதாக கூறினார்.

எங்கள் போராட்டத்தை முறியடிக்க பாஜகவினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவினர் செல்போன் மூலம், எங்களை மிரட்டி வருகின்றனர் என்றார்.

 

போராட்டத்தை கைவிடாவிட்டால், இரவு தூங்கும்போது, லாரி அல்லது காரை ஏற்றி கொலை செய்துவிடுவோம் என்று  திருச்சியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவரும் எங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண்களை வைத்து டெல்லி பாராளுமன்ற காவல் துறையில் புகார் அளித்துள்ளோம்.

எங்களுக்கு இதுவரை 600-க்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் வந்துள்ளன என்றார். எங்களின் போராட்டத்தை பாஜகவின் எச். ராஜா கொச்சைப்படுத்தி வருகிறார் என்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுக் காரணம், பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜாதான் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.