அயனாவரம் 9 கிலோ நகைகளை திருடிக்கொண்டு மாயமான கடை ஊழியர் தீபக் 35 நாட்களுக்கு பிறகு ஜெய்ப்பூரில் பிடிபட்டுள்ளான். 

அயனாவரத்தில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி கோபாராம் என்பவரது நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் , ரூ.2 லட்சம் பணத்தை கடையில் வேலை செய்த தீபக் என்ற வாலிபர் திருடி கொண்டு மாயமானாது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தீபக் நகை கடை உரிமையாளர் கோபாராமின் பள்ளிபருவ தோழர் குணாராமின் மகன் என்பதால் தனது நகைக்கடையில் நம்பி பணிக்கு வைத்துள்ளார்.

ஆனால் தீபக்கின் நடத்தை சரியில்லை. பணம் கையில் புரண்டதால் பெண்கள் சகவாசம் அதிகம் இருந்துள்ளது. ராஜஸ்தானிலிருந்து திருமணம் ஆன பெண்ணை சென்னை அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

அந்த பெண்ணும் திருட்டுக்கு முன்பு ஒரு வாரமாக காணாமல் போனார் இந்த நிலையில் இந்த திருட்டும் நடந்துள்ளது .தீபக்கும் அவருடன் மூன்று ஆசாமிகளும் திருட்டில் ஈடுபட்டது பின்னர் தெரிய வந்தது. அதில் ஒருவனை சமீபத்தில் போலீசார் பிடித்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தானுக்கு பாதுகாப்பாக சென்ற தீபக் ,அவனது காதலி, நண்பன் மூவரும் தங்களது செல்போனை ஆஃப் செய்து விட்டதால் அவர்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீசார் அவர்களை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தனர்.ஆனால் பல முறை சென்றும் போலீசாரால் தீபக் எங்கிருக்கிறார் எனபதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே தீபக் பற்றிய விபரங்கள் ராஜஸ்தான் மாநில போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்தது. போட்டோ, போன் நம்பர், காதலியின் போன் நம்பர், உறவினர்கள் விலாசம் அனைத்தும் இருந்தும் தீபக் வெகு சாமர்த்தியமாக போலீஸ் பிடியில் சிக்காமல் 35 நாட்களை ஓட்டிவிட்டான்.

ஆனால் குற்றவாளிகள் வெகு நாட்கள் தப்ப முடியாது என்ற நிலைதன் யதார்த்தம் எனபதை உணர்த்தும் விதமாக தலைமறைவாக இருந்த தீபக்கை ஜெய்ப்பூர் போலீசார் நேற்றிரவு அவனது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். உடனடியாக இந்த தகவல் சென்னை போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அயனாவரம் போலீசார் இன்று ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு முறைப்படி தீபக்கை கைது செய்து அதன் பின்னர் அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வருவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கைதான தீபக்கிடமிருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.