Awareness rally at Perambalur on World Blood Donation Day


பெரம்பலூர்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை அருகே தொடங்கிய இந்த ஊர்வலம், பழைய பேருந்து நிலையம் வழியாக தாசில்தார் அலுவலகம் அருகே சென்று முடிந்தது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனருமான மருத்துவர் சம்பத், மாவட்ட திட்ட மேலாளர் மருத்துவர் சிரில், 

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மருத்துவ அலுவலர் திவ்யா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன், மாவட்ட நம்பிக்கை மைய மேற்பார்வையாளர் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.