Awareness Program for Public on Tobacco control day Municipal Commissioner started
மதுரை
மதுரையில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் தொடக்கிவைத்தார்.
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மருத்துவமனை டீன் ராஜாமுத்தையா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ்சேகர் பங்கேற்று விழிப்புணர்வு வாசகத்துடன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.பொதுமக்களுக்கு மருத்துவகல்லூரி மாணவ - மாணவிகள் புகையிலையின் ஆபத்துக்கள் குறித்து விளக்கினர். அங்கு கூடியிருந்தவர்கள் விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், முதன்மை செயல் அதிகாரி சுப்பிரமணி, முதுநிலை பொதுமேலாளர் கணேஷ்வீரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மருத்துவர்கள் ராஜ்குமார், சமீர்பெல்லி நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவமனை அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
