awareness program for auto drivers

சென்னை நகரில் பொதுமக்கள் பஸ் போக்குவரத்தைவிட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களையே அதிகம் நாடுகின்றனர்.
குறிப்பிட்ட தூரம் வரை செல்ல ஷேர் ஆட்டோக்களும், நெடுந்தூரம் செல்வதற்கு சாதாரண ஆட்டோக்களிலும் பயணம் செய்கின்றனர். இவ்வாறு அவசர தேவைக்கு செல்லும் பயணிகளிடம், ஆட்டோ டிரைவர்கள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள்சென்றன.

இதுபோன்ற புகார்களை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று நடந்தது.

பெரம்பூர் தாசில்தார் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ சகாயநாதன் ஆகியோர் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

இதில்,பெரம்பூர் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது, ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது. அவர்களை, குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அலைக்கழிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனை ஆட்டோ டிரைவர்கள் உறுதிமொழியாக வாசித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தர்ராஜன் கூறுகையில், பொதுமக்கள் ஏராளமானோர் ரயில், பஸ்களில் சென்று வருகின்றனர். அங்கிருந்து, அவர்கள் செல்வதற்கு ஆட்டோக்களை நாடுகின்றனர். ஆனால், ஆட்டோ டிரைவர்கள், கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதனை தடுக்கவே இந்த முகாம் நடத்துகிறோம்.

பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு போலீஸ் பூத் அமைத்துள்ளோம். அங்கு எந்நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். அவர்களிடம், தங்களுக்கு எந்த பகுதி செல்ல வேண்டும் என கூறினால், அவர்களே ஆட்டோ வரவழைத்து குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

மேலும், ஆட்டோ டிரைவர்கள் முறைகேடு செய்தாலும், கூடுதலா பணம் வசூலித்தாலும், அங்குள்ள போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். இதற்கான மனு அங்கு வழங்கப்படும் என்றார்.