அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாயகன்: யார் இந்த கார்த்திக்!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. முதல் பரிசை கார்த்திக் என்பவர் தட்டிச் சென்றுள்ளார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. பொங்கல் நாளன்று அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும் (இன்று), பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை ஆட்சியர் தலைமையில் வீரர்கள் உறுதி மொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டு திமிறிய காளைகளை, வீரமுடம் காளையர்கள் அணைந்தனர்.
இந்த நிலையில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 10 சுற்றுடன் நிறைவு பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், மொத்தம் 817 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 400 வீரர்கள் களம் கண்டனர். இதில், 17 காளைகளை பிடித்து மதுரை அவனியாபுரம் கார்த்திக் முதலிடத்தை பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல், 13 காளைகளை பிடித்து மதுரை அவனியாபுரம் மாரியப்பன் ரஞ்சித் இரண்டாம் இடத்தை பிடித்தார். 9 காளைகளை பிடித்து சிவகங்கை திருப்புவனம் முரளிதரன் மற்றும் தேனி முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்றாம் இடத்தை பிடித்தனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தியில் நாளை முதல் ரயில் சேவை பாதிக்க வாய்ப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சிறந்த காளையின் உரிமையாளர் அவனியாபுரத்தைச் சேர்ந்த .ஆர். கார்த்திக்கிற்கும் நிசான் கார் பரிசளிக்கப்பட்டது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த கார்த்திக் கூறுகையில், காயம் பட்டாலும் நம் ஊருக்கு நாம் தான் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இவர், கடந்த ஆண்டில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அணைந்து முதலிடம் பிடித்து சொகுசு காரை பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.