அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து: சிஐடிக்கு மாற்றம் - முதல்வர் சித்தராமையா!
அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து தொடர்பான வழக்கு விசாரணை சிஐடி போலீசாருக்கு மாற்றப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால், அங்குள்ள பட்டாசு கடைகளில் பல்வேறு ரக பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. மேலும் தீபாவளி விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் வரவழைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், அங்குள்ள பட்டாசு கடை ஒன்றுக்கு பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் வந்து இறங்கின. அதனை இறக்கும் பணிகளில் கடையின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உடல்கருகி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல், பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!
இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து தொடர்பான வழக்கு விசாரணை சிஐடி போலீசாருக்கு மாற்றப்படும் என தெரிவித்தார்.
“அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லாத இடத்தில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து விதிகளையும் உரிமையாளர்கள் மீறியுள்ளனர். இதன் காரணமாக 14 பேரின் மரணமடைந்துள்ளனர். 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கு சிஐடி போலீசார் விசாரணைக்கு ஒப்படைக்கப்படும்.” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.