இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான போர் பதற்றம் காரணமாக பெத்லகேமில் சிக்கித் தவித்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எல்லையை கடந்து அவர்கள் எகிப்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார். “சமீபத்திய தகவலின்படி, வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் போர் மோதலில் சிக்கித் தவித்த மேகாலயாவைச் சேர்ந்த 27 பேர் பாதுகாப்பாக எகிப்து எல்லையைத் தாண்டிவிட்டனர்.” என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலில் சிக்கித் தவித்த 27 பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.ஆர் கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினரும் (மனைவி மற்றும் மகள்) உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஜெருசலேமுக்கு புனித யாத்திரை சென்ற மேகாலயாவை சேர்ந்த 27 பேர் பெத்லகேமில் சிக்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்திருந்தார். அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே போர் மூண்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் புகுந்த பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் வைத்துள்ளனர். அதேபோல், காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது.
இஸ்ரேல் சிறுவனை துன்புறுத்தும் பாலஸ்தீன சிறுவர்கள்: வைரல் வீடியோ!
அத்துடன், போர் பிரகடனத்தை அறிவித்துள்ள இஸ்ரேல் அரசு, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து உத்தரவிட்டுள்ளது. 1973ஆம் ஆண்டுக்கு நடைபெற்ற போருக்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.