சென்னையில் நேற்று காவல்துறையினர் தடியடி நடத்தியது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பாலு உயர்நீதிமன்றத்தில் முறையிட மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

ஜல்லிகட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன், வழக்குகளை விசாரிக்க துவங்கியதும், வழக்கறிஞர் பாலு, ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், இதுசம்பந்தமாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போராட்டகாரர்களை இடையூறு செய்ய கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளதால், அதனுடன் தன் வழக்கையும் விசாரிக்க கோரினார் வழக்கறிஞர் பாலு. இதை ஏற்க மறுத்த நீதிபதி மகாதேவன், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரிப்பதாக தெரிவித்தார்.

தனியாக மனுத்தாக்கல் செய்ய்யும் படி உத்தரவிட்டார்.