Asianet News TamilAsianet News Tamil

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்…

atrocities of-the-sri-lankan-navy-has-been-increasing-d
Author
First Published Jan 9, 2017, 9:32 AM IST


கோட்டைப்பட்டினம்,

கடலில் மீன் பிடித்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஆறு பேரை சிறைப் பிடித்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று மீனவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து சனிக்கிழமை காலை 151 விசைப்படகுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த சக்திவேல் (26) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதேப் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (35), செல்வம் (25), பிரகாஷ் (20), விஜி (25), மாரிமுத்து (28) ஆகிய ஆறு பேரும் நேற்று முன்தினம் இரவு இந்திய கடல் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகுகளைத் தடுத்து நிறுத்தி மிரட்டி உள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படையினர் சக்திவேல் மற்றும் அவருடன் சென்ற ஆறு பேரையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைப்பிடித்தனர்.

பின்னர் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த ஆறு மீனவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்து, கண்ணீர் விட்டு கதறினர்.

கடந்த 4-ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் இப்போது மேலும் 6 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற சம்பவம் இந்த பகுதி மீனவர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தெரிவித்ததாவது:

“இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்கள் விடுவிக்கப்படாத நிலையில், தற்போது மேலும் 6 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்.

சில தினங்களுக்கு முன்பு 51 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதால் எந்த பயனும் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும், 4 நாட்களுக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்களையும், தற்போது பிடித்து செல்லப்பட்ட 6 மீனவர்களையும் அவர்களின் விசைப்படகினையும் மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios