பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கொள்முதல் செய்து, அதற்கான தொகையை வங்கிகளில் ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எறையூர் சர்க்கரை ஆலை எதிரே விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை எதிரே விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில், கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்; பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள 18 மெகா வாட் இணை மின்சாரம் தயாரிக்கும் பணி, நவீனப்படுத்தப்படும் பணியை விரைவாக முடித்து 2016-17 ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் கரும்பு அரைவை செய்ய வேண்டும்; கரும்பு நிலுவை தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும்; தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர் கடன், நகைக் கடன் வழங்க வேண்டும்; பருவமழை பெய்யாததால் அனைத்து விவசாயப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கொள்முதல் செய்து, அதற்கான தொகையை வங்கிகளில் ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ஆர். ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் அ. வேணுகோபால், கரும்பு பயிரிடுவோர் சங்க மாவட்டச் செயலர் முருகேசன், அரியலூர் மாவட்ட செயலர் அன்பழகன், மாவட்டத் தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.