கள்ளக்காதலை பிரிக்க காரணமாக இருந்த கிளி ஜோதிடரை வெட்டி கொலை செய்தேன் போலீசாரிடம் கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருப்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (36), பார்க் ரோட்டில் கிளி ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த மாதம் 24-ம் தேதி ரோட்டில் நடந்து சென்ற போது 'ஹெல்மெட்' அணிந்த படி வந்து ரமேஷை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தார். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நாகப்பட்டினம், குத்தாலத்தை சேர்ந்த ரகு, 40 என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். 

போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது ரகுவுக்கும், ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. தங்களை சேர்த்து வைக்க, அவர்கள், ஜோதிடர் ரமேஷின் உதவியை நாடியுள்ளனர். 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளனர். பின், ரகுவுடன், அப்பெண் நெருங்கி பழக ஆரம்பித்ததால் ஜோதிடர் செய்த வசியம் என்று நம்பி இருந்து வந்தார். இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தனர். 

இதற்கிடையில், இது அப்பெண்ணின் கணவருக்கு தெரியவர, அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பெண்ணை வரவழைத்து அறிவுரை வழங்கி கணவருடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பெண்ணை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறி ஜோதிடரை ரகு நாடியுள்ளார். வசியம் செய்து சேர்த்து வைப்பதாக கூறி, பல கட்டமாக, 2 லட்சம் ரூபாயை ரமேஷ் வாங்கியுள்ளார். ஆனால், அவர் சேர்த்து வைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ரகு ரமேஷை வெட்டிக் கொன்றதமாக தெரிவித்துள்ளார்.