இலால்குடி,
ஜெயலலிதா இறந்த வருத்ததில் உயிரிழந்தவருக்கு இலட்சக்கணக்கில் நிவாரணமும், வறட்சியால் உயிரிழந்த 206 விவசாயிகளை கணக்கில் கொள்ளாமல் 17 பேர் தான் இறந்துள்ளனர் என்று தமிழக அரசு கூறுவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
இலால்குடியை அடுத்த பல்லபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (60). இவர் தனது நிலத்தில் நெல் நாற்று, சோளம், கொத்தமல்லி ஆகியவை சாகுபடி செய்திருந்தார். அவையனைத்தும், தண்ணீரின்றி கருகியதைக் கண்டு மன வேதனை அடைந்தார்.
நேற்று முன்தினம் தனது வயலுக்குச் சென்றவர் வயலின் அருகே இருந்த மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவருடைய உடல் மீட்டு உடற்கூராவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ஐயாகண்ணு, தி.மு.க. ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கமணி, பாரதீய கிசான் சங்க வீரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசீலன், பல்லபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பழனிச்சாமியின் உடலுக்கு அருகே, விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டியவாறு போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கூறுகையில், “தமிழக அரசு விவசாயிகளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இது வருங்காலத்தில் அதிமுகவிற்கு ஒரு பெரிய இழப்பாக அமையும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு வருந்தி உயிரிழந்ததாக 166 பேருக்கு இலட்சக்கணக்கான ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிலையில், வறட்சியால் உயிரிழந்த 206 விவசாயிகளை கணக்கில் கொள்ளாமல் 17 பேர் தான் இறந்துள்ளனர் என்று கூறுவது பெரும் வேதனை அளிக்கிறது.
வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீரின்றி வறண்டதாலும், உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.10 இலட்சம் முதல் ரூ.25 இலட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்”, என்று தெரிவித்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் ஐயாகண்ணு கூறுகையில், “கடந்த 150 ஆண்டுகள் இல்லாத வறட்சியை தமிழகம் சந்தித்துள்ளது. விவசாயிகளின் வறட்சி மரணத்தை வேறு வகையாக அமைச்சர் பேசுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மற்றும் புஞ்சை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம், வாழை பயிரிட்டவருக்கு ரூ.1 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST