கூடுவாஞ்சேரி

இரண்டாம் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல மதுக்கடைகளை மூடி, மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பீர்களா? என்று மக்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, 2016 மே, 24-ல் 500 மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பித்து, மதுக்கடைகள் திறந்து இருக்கும் நேரமும் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டது.

இதன்படி, 2016 ஜூன், 19 முதல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் அடக்கிய சென்னை மண்டலத்தில், 58 மதுக்கடைகள் மூடப்பட்டன.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 மதுக்கடைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில், 35 மதுக்கடைகளும் மூடப்பட்டன. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில், வியாபாரம் குறைவாக இருந்த கடைகளே, அநேக இடங்களில் மூடப்பட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மதுக்கடை, ஊரப்பாக்கம் - ஆதனுார் சாலையில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு அதிக இடையூறு பயக்கும் மதுக்கடை, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள மதுக்கடை, மறைமலைநகர், ஜி.எஸ்.டி சாலை மதுக்கடை ஆகியவற்றை அகற்ற, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில், தைலாவரத்தில் இயங்கிய மதுக்கடை கடந்த ஜூனில் மூடப்பட்டது.

இது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. இதனால், எந்த நன்மையும் ஏற்படவில்லை என புகார்களும் குவிந்தன.

வியாபாரம் குறைவாக இருந்ததால் மூடப்பட்ட மதுக்கடை என பகுதிவாசிகளால் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பகுதிவாசிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக விளங்கிய மதுக்கடைகள், வழக்கம் போல் இயங்கின.

இந்த நிலையில், பல்வேறு அரசியல் பிரச்சனைகளுக்கு இடையே முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஐந்து முக்கிய கோப்புகளில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.

இதில், பூரண மதுவிலக்கை அடைய, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, மேலும், 500 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

முதல்வரின் புதிய உத்தரவுப்படி, மூடப்பட வேண்டிய மதுக்கடைகளை, அதிகாரிகள் பரிந்துரை செய்ய வேண்டும்.

பரிந்துரையிலும், அதிக செல்வாக்கு மற்றும் வசூல் நடக்கும் மதுக்கடைகள், அரசியல் தலையீட்டால் தவிர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், மேற்கொண்டு மூடவிருக்கும் கடைகள், நடுநிலை தன்மையோடு அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பகுதியில் இடையூறாக உள்ள கடைகள் குறித்து எங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையில், “பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும், நெடுஞ்சாலை, பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகேயும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்” எனவும் தெரிவித்தனர்.

மேலும், மதுவிலக்கின் முதற்கட்ட நடவடிக்கையாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 500 மதுக்கடைகளை மூடியதோடு, மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் குறைத்தார்.

இதே போல, முதல்வர் இடைப்பாடி பழனிசாமியும், மதுக்கடைகளின் வேலை நேரத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இரவு நேரங்களில் மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பது குறித்து, முடிவுகள் எடுக்க, சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.