Arrested husband and wife arrested in Kalupnottu The van driver trapped

திருச்சி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருச்சி பாலக்கரையில் வீட்டு மாடியில் கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட கணவன், மனைவி மற்றும் வேன் ஓட்டுநர் ஆகிய மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கடைவீதியில் நேற்று பகல் ஆம்னிவேனில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் வந்து கடைவீதியில் உள்ள பழக்கடை, பெட்டிக்கடைகளில் 100 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி கொண்டு, அதற்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை மாற்றினர்.

அங்குள்ள பேன்சி கடை ஒன்றில் பொருட்களை வாங்கியபோது, கடைக்காரர் 500 ரூபாய் நோட்டை பார்த்துவிட்டு ஜெராக்ஸ் போல உள்ளதே என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் மீதி பணத்தை கூட வாங்காமல் வேனில் ஏறி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அப்போது அந்த கடையில் நின்ற சிலர் வேனில் சென்றவர்களை மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வேனில் இருந்து மூன்று பேரும் இறங்கி, குளத்தூர் கடைவீதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி நோட்டை மாற்றினார்கள்.

அப்போது, அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்த இளைஞர்கள் மூன்று பேரையும் பிடித்து கீரனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

உடனே காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுரு, ஆய்வாளார் ஜெயராமன் மற்றும் காவலாளர்கள் அங்கு சென்று அவர்களை பிடித்து வேனுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அவர்கள் திருச்சி பாலக்கரையை சேர்ந்த அப்துல்சுக்கூர் (41), அவரது மனைவி ஹசீனாபானு (32), வேன் ஓட்டுநர் சையது காசிம் (55) என்பது தெரியவந்தது. அவர்களுடைய வேனில் கடைவீதிகளில் வாங்கிய பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும், ரூ.16 ஆயிரத்து 900-மும் இருந்தது.

மேலும், இவர்கள் பாலக்கரை என்.எம்.தெருவில் வசித்து வருவதும், வீட்டின் மாடியில் வெள்ளைதாளில் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் எடுக்கும் எந்திரம் மூலம் கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.

உடனே காவலாளர்கள் அப்துல் சுக்கூரை காரில் அழைத்துக் கொண்டு பாலக்கரை பகுதிக்கு சென்றனர். அங்கு என்.எம். தெருவில் உள்ள அவரது வீட்டிற்குள் சென்று 2-வது மாடியில் சோதனை நடத்தினர்.

அங்கு பிரிண்ட் எடுக்க பயன்படுத்தும் எந்திரம், ரூபாய் நோட்டுகளின் நடுவில் ஒட்டப்படும் பளபளப்புடன் கூடிய காகிதம் மற்றும் கள்ளநோட்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் இருந்தன. மேலும், அங்கிருந்த ஒரு பையில் கட்டு, கட்டாக ரூ.5 இலட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்தன. அவையனைத்தையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து, அப்துல்சுக்கூர், ஹசீனாபானு, சையதுகாசிம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

பிடிபட்ட மூன்று பேருக்கும் மட்டும் இதில் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என காவலாளர்கள் விசாரணையை தொடர்கின்றனர்.