பனைக்குளம்,

மண்டபம் வேதாளையில் 350 கிலோ கடல் அட்டைகளை கடத்திய மீனவரை கைது செய்த வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்திய 50 பேர் கொண்ட கும்பல், கைதானவரை தப்பிக்கவிட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளையில் இருந்து கடல் அட்டைகள் கடத்தி வரப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

எனவே, மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனகாப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அங்க விரைந்து சென்று கண்காணித்தனர்.

அப்போது சிறிய மீன்பிடி படகுகளில் சிலர் கடல் அட்டைகளை பிடித்து வருவதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடிக்கச் சென்றனர். இதையடுத்து படகில் வந்தவர்கள் கடலில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் ஒரு படகையும் அதில் இருந்த வேதாளையை சேர்ந்த மீனவர் துல்காஜி என்பவரையும் வனத்துறையினர் பிடித்து அவரிடம் இருந்த 30 சாக்கு பைகளில் இருந்த 350 கிலோ அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர், துல்காஜியையும், கடல் அட்டைகளையும் வனத்துறையினர் ஜீப்பில் ஏற்றியபோது அங்கு 50 பேர் கொண்ட கும்பல் திரண்டு வந்தது. அந்த கும்பல் வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தாக்கி துல்காஜியை மீட்டு அழைத்துக் கொண்டு தப்பியோடிவிட்டது.

இதுகுறித்து வனச்சரகர் சதீஷ், வனஉயிரின காப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து அதிரடிப்படை காவலாலர்கள் அங்கு விரைந்துச் சென்று இராமேசுவரம் காவல் கண்காணிப்பாளர் காந்திமதிநாதன் தலைமையில் வேதாளைக்குச் சென்றனர்.

அங்கு வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க காவலாளர்கள் வீடுவீடாக சோதனை செய்தனர். அப்போது ஒரு குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 40 கிலோ கடல் அட்டைகள் மற்றும் பொருட்களை காவலாளர்கள் மற்றும் வனத்துறையினர் கைப்பற்றினர்.

இதுகுறித்து வனச்சரகர் சதீஷ், “வேதாளை வடக்கு கடல் பகுதியில் கடல் அட்டைகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றோம். அப்போது சிலர் சிறிய மீன்பிடிபடகுகளில் கடல் அட்டைகளை பிடித்து வந்தனர். அவர்கள் பிடிக்க முயன்றபோது கடலில் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். துல்காஜி என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரையும், கைப்பற்றப்பட்ட 350 கிலோ கடல் அட்டைகளையும் வாகனத்தில் ஏற்றியபோது அங்கு வந்த ஒரு கும்பல் எங்களை தாக்கி துல்காஜியை மீட்டு தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து துல்காஜி, அல்லாபிச்சை, உமர்அலி உள்ளிட்டவர்கள் மீது மண்டபம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

வனச்சரகர் புகாரின்பேரில் மண்டபம் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.