Arrested for stealing sand Pokhalai tractor lorry seized ...
இராமநாதபுரம்
முதுகுளத்தூர், மலட்டாறு மற்றும் கடலாடி பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளிய நால்வர் கைது செய்யப்பட்டு மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன், டிராக்டர் மற்றும் லாரி போன்ற இயந்திரங்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் காவலாளர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் திருட்டுத்தனமாக வாகனங்களில் மணல் அள்ளுவதாக தகவல் வந்ததன்பேரில் காவலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, திருட்டுத்தனமாக உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் இருவர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து பாக்குவெட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்திருளன் (33), லாரி ஓட்டுநர் தத்தங்குடியைச் சேர்ந்த இராமச்சந்திரன் மகன் செந்தூர்பாண்டி (23) ஆகிய இருவரையும் கைது செய்து லாரி, பொக்லைன் இயந்திரங்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, மலட்டாற்றில் இருந்து கோவிலாங்குளம் சாலையில் வந்த டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் சேதுபதி (20) என்பவரை கைது செய்த காவலாளர்கள் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று, கடலாடி அருகே பூலாங்குளம் கண்மாய்க்குள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த கீழக்கிடாரத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் நாதன் (26) என்பவரை கைது செய்த காவலாளர்கள் மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
