பொறையாறு அருகே சேவல் சண்டை நடத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகை மாவட்டம், பொறையாறு அருகே அனந்தமங்கலத்தில் சேவல் சண்டை பந்தயம் நடத்தப்படுவதாக பொறையாறு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காவல்துறை இன்ஸ்பெக்டர் முருகவேல், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் காவலாளர்கள் அனந்தமங்கலம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அங்கு அனந்தமங்கலம் கோவில் தெருவில் உள்ள ஒரு திடலில் மூவர் சேவல் சண்டை பந்தயத்தை நடத்தி கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். உடனே அவர்களை பிடிக்க காவலாளர்கள் முயற்சி செய்தனர்.

அதில் அனந்தமங்கலம் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கண்ணன் (31) என்பவர் மாட்டிக் கொண்டார். அவரிடம் இருந்த சேவல்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக பொறையாறு அருகே கிள்ளியூரை சேர்ந்த பரணி, காரைக்காலை சேர்ந்த மெர்சல் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.