துறையூரில் உள்ள பட்டாசு கடைகளில், நாட்டு வெடிகள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, நாட்டு வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், துறையூரில் உள்ள பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் முசிறி துணை காவல்துறை சூப்பிரண்டு செல்வம் தலைமையில் துறையூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வம், மாரிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது நந்தகுமார், சண்முகம், ராஜசேகர், தாமோதரன் ஆகியோரது பட்டாசு கடைகளில் நாட்டு வெடிகள் விற்றதை அந்தக் குழு கண்டிபிடித்தது. அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர். மேலும் அந்த கடைகளில், மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் முசிறி துணை காவல்துறை சூப்பிரண்டு செல்வம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்–இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, சத்யா, கண்ணன் மற்றும் காவலாளர்கள் முசிறி பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முசிறி கைகாட்டி அருகே கனகலிங்கம், சரவணக்குமார் ஆகியோரும், காந்தி நகர் பகுதியில் முருகேசன், அசோக்குமார் ஆகியோரும் தங்களது பட்டாசு கடைகளில் அதிக சத்தத்துடன் வெடிக்க கூடிய பட்டாசுகளை வைத்திருந்ததாக காவலாளர்கள் அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.8500 மதிப்புள்ள அதிக சத்தத்துடன் வெடிக்க கூடிய பட்டாசுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.