Around 2202 people arrested during road blockade in Madurai
மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2,202 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல கட்சிகள் அறிவித்து அதன்படி நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
அப்போது அந்தக் கட்சியினர் மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை புறநகரில் 1237 பேரும், மாநகரில் 965 பேரும் என மொத்தம் 2202 பேர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 20 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மதுரை ஊமச்சிகுளத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். அதில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்றனர்.
மதுரை மாநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வல்லரசு பார்வர்டு கட்சித்தலைவர் பி.என். அம்மாவாசி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருமங்கலத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தி.மு.க. அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுப்பிரமணியன் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.
மேலும் அலங்காநல்லூர் அருகே உள்ள கேட்டுக்கடையில் பஸ் மறியல் நடைபெற்றது. இதில் அலங்காநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கென்னடிகண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல்வ அரசு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தவமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுதந்திரம், நகர செயலாளர் தங்கமலப்பாண்டி, முன்னாள் யூனியன் தலைவர் தங்கப்பாண்டியன், 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர்கள் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கருமாத்தூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர், பார்வர்டு பிளாக் கட்சியினர் உள்பட பலர் மறியலில் ஈடுபட்டனர்.
சேடப்பட்டி ஒன்றியம் எழுமலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகர செயலாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் தனக்கன்குளம் பேருந்து நிறுத்தம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், தனக்கன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி ஆகியோர் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில், அவைத்தலைவர் தனபால் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை பஸ் நிலையம் அருகே தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி தலைமை கழக பேச்சாளர் கவிஞர் ஜுவா ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட வட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சாமிவேல், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் உள்பட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்ட அகில இந்திய மாதர் சங்க மாவட்ட தலைவி பொன்னுத்தாய் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்படி மதுரை மாவட்டம் முழுவதும் முழுஅடைப்பின்போது, சாலை மறியலில் ஈடுபட்ட 2202 பேரை காவலாளர்கள் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கி வைத்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.
