Ariyalur court verdict against surviver who bribe of Rs.2500

அரியலூர்

ரூ.2500 இலஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வல்லம் கிராமம்,. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (43). அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வாரியங்காவலில் உள்ள தனது மனைவி விஜயாவுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தருமாறு, ஆர்.எஸ்.மாத்தூர் படைவெட்டி குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவரும், குவாகத்தில் நில அளவையர் பணியாற்றியவருமான மணிமொழி (63) என்பவரை அணுகினார்.

அதற்கு அவர் நிலத்தை அளந்து கொடுக்க ரூ.2500 இலஞ்சம் கேட்டுள்ளார். இலஞ்சம் தர விரும்பாத கருணாநிதி இதுகுறித்து அரியலூர் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் 17.8.2012 அன்று இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களின் அறிவுரையின்படி இரசாயன பொடி தடவிய ரூ.2500-ஐ மணிமொழியிடம், கருணாநிதி கொடுத்தார்.

இதனை மறைந்திருந்த பார்த்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் மணிமொழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

நில அளவையர் இலஞ்சம் வாங்கிய வழக்கு அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ரவி, இலஞ்சம் வாங்கிய சர்வேயர் மணிமொழிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கியதை அடுத்து மணிமொழியை காவலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.