தேனியை அச்சுறுத்திய அரிகொம்பன்.! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை- மீண்டும் காட்டு பகுதியில் விட திட்டமா.?
கேரளாவில் அட்டாகசம் செய்த அரிகொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விட்ட நிலையில், தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தேனி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அரி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
அட்டகாசம் செய்யும் அரிகொம்பன்
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களை அச்சுறுத்தி 10க்கும் மேற்பட்டவர்களை கொன்று மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிகொம்பன் ஒற்றை காட்டு யானையை கடந்த மாதம் கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர். இதனையடுத்து அரி கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தி தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் விடப்பட்டது. இந்த யானையானது. அடுத்த இரண்டு தினங்களில் தமிழகப் பகுதிக்குள் நுழைந்து தமிழகத்தின் மேகமலை, இரவங்கலாறு பகுதிகளில் வளம் வந்தது. இதன் காரணமாக மேகமலைக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
அரிகொம்பன் யானை தாக்கி தமிழகத்தில் முதல் பலி.! அச்சத்தால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள்
ஊருக்குள் புகுந்த அரிகொம்பன்
இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்பம் நகருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. அப்போது காவலாளி ஒருவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மேலும் மயக்க ஊசி மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், முதுமலையிலிருந்து பழங்குடியின மக்களான பொம்மன் குழுவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஒரு வாரமாக சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் என்ற ஊரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருமாள் கோவில் மலைப்பகுதியில் வலம் வருவதை அறிந்த வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்த நிலையில்,
மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டது
நேற்று மாலை யானையை பிடிக்கும் திட்டத்தை தொடங்கினர்.நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் கம்பத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று கும்கி யானைகளை தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பகுதிக்கு வனத்துறையினர் அழைத்து வந்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் அரிக்கொம்பன் யானைக்கு மருத்துவர்கள் 2 முறை மயக்க ஊசி செலுத்தி அதனை மயக்கம் அடைய செய்தனர்.இதனையடுத்து 3 கும்கி யானை மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவிகளுடன் அரிக்கொம்பன் யானையை அதற்குரிய வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் தற்போது அந்தப் பகுதியில் இருந்து யானையை அழைத்து சென்றுள்ளனர். யானை பிடிபட்டதால் தேனி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
முதுமலைக்கு கொண்டு செல்லப்படும் அரிகொம்பன்
பிடிபட்ட அரிக்கொம்பன் யானை உடம்பில் பல காயங்கள் இருப்பதால் முதுமலை வனப்பகுதிக்கு சென்று அங்கு சிகிச்சை அளித்த பின்பு காட்டுப்பகுதியில் விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எந்த பகுதியில் யானை விடப்பட உள்ளது என்பது குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கேரள வனத்துறையால் பிடிபட்ட யானை மீண்டும் காட்டு பகுதிக்குள் விட்ட நிலையில் தற்போது மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. எனவே யானையை முகாமில் அடைத்து வைப்பதா அல்லது மீண்டும் காட்டிற்குள் விடுவதா என்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
சிறுமி ஆன்மா அமைதியடைய உதவுங்கள்..! தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூடுங்கள் - அன்புமணி