தருமபுரி

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட சாராயக் கடையை மூட வேண்டும் என்று அந்தக் கடையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சாலையில் சோகத்தூர் கூட்டுரோடு உள்ளது. இந்த பகுதியின் அருகே அண்மையில் புதிதாக சாராயக் கடை ஒன்று திறக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் சென்று வரும் இந்த பகுதியில் சாராயக் கடை திறக்கப்பட்டதற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அந்த சாராயக் கடையை மூடக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்த சாராயக் கடையை முற்றுகையிட்டனர். சாராயக் கடையை உடனடியாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் உறுதியளித்தனர்.

இதனையேற்றுக் கொண்ட மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.