65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை என இரண்டு விருதுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். 

ஆஸ்கார் விருதில், தன் இசைக்காக இரண்டு விருதுகளை இந்தியாவிற்காக அள்ளி வந்த இசைப்புயல், தற்போது மீண்டும் ஒரு சாதனையை தன் வசமாக்கியுள்ளார்.

இரண்டு தேசிய விருதுகளை ஒரே சமயத்தில் பெற்று, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளைப் பெறுவது இதுவே முதல் முறை. 

இரண்டு விருதுகளை பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மற்றொரு சாதனையையும் செய்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் சாதனையை முறியடித்துள்ளார். இளையராஜா இதுவரை 5 தேசிய விருதுகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் 6 தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.