கடந்த 2016 ஜூன் மாதம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலம் முடிவடைந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் இடஒதுக்கீடு செய்ததில், தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக திமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தது.

மேலும், திமுக தரப்பில் வைக்கப்பட் குற்றச்சாட்டுகளுக்கான பதில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியது. இதையொட்டி, உள்ளாட்சி தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம் மே 15ம் தேதிக்கு முன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று வந்தது. அப்போது, ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலை, பள்ளித் தேர்வுகள் முடிந்த பின்னர், மே 15ம் தேதிக்குள் நடத்த முடியும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு அதிமுக பொது செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக செயல்படுகிறது.

இதில் தனி பெரும்பான்மையை காட்டி சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். இதைதொடர்ந்து நேற்று முதலமைச்சராக பொறுபேற்ற அவர், முதல் கையெழுத்தாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கையெழுத்திட்டார்.

மேலும், அதிமுவில் பிளவு ஏற்பட்டது மட்டுமின்றி கடந்த சில மாதங்களாக, அரசு இயந்திரம் இயங்காமல் உள்ளது. இதனால், பொதுமக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனை கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆளுங்கட்சியான அதிமுகவிலுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.