சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் உத்தரவு நகலை நாளை மறுநாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாவார்கள் எனவும், உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், மதுரையில் ஆரோக்கியராஜ்  என்பவரிடமிருந்து 6 பழங்கால சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரான காதர்பாஷா மற்றும் போலீஸ்காரரான சுப்புராஜ் ஆகியோர் கைப்பற்றியதாகவும், பின்னர், அதை விற்று இருவரும் பணத்தை பிரித்து எடுத்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் இதற்கான ஆதாரங்களை ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் காதர்பாஷா டிஎஸ்பியாகவும், சுப்புராஜ் சிறப்பு சார்பு-ஆய்வாளராகவும் உள்ளனர்.

எனவே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராகி தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராகினார். அவரிடம் சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார் நீதிபதி.

அதற்கு டிஎஸ்பி காதர்பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் ரயில்வே துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என கோரி உத்தரவிட்டது.  

மேலும் அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும் கும்பகோணம் கூடுதல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இதுகுறித்த வழக்கில் பதில் அளித்த தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலை நியமித்து இன்று இரவுக்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என தகவல் தெரிவித்தது. 

இதைகேட்ட உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் உத்தரவு நகலை நாளை மறுநாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாவார்கள் எனவும், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.