another airport in chennai
சென்னையில் மீனம்பாக்கம் விமானநிலையம் இருக்கும் நிலையில், 2-வது சர்வதேச விமானநிலையம் அமைப்பதற்கான பணிகள் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஒரு தனியார் நிறுவனம் மதுராந்தகம் அருகே 2,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறையிடமும் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
2-வதாக அமைய உள்ள விமானநிலையம், மாமண்டூர் மற்றும் மதுராந்தகம் இடையே, குடியிருப்பு பகுதிகள் அதிகம் இல்லாத இடத்தில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 2-வது விமானநிலையம் அமைய இருக்கும் இடம் என்பது குடியிருப்பு பகுதிகள் இல்லாதது. ரெயில்வே நிலையம், நெடுஞ்சாலை ஆகியவையும், விமானநிலையத்துக்கு மிக அருகில் இருக்கிறது.
மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கும், புதிதாக அமைய இருக்கும் விமானநிலையத்துக்கும் 90 நிமிடங்கள் போக்குவரத்து மட்டுமே இருக்கும். இப்போது தேர்வுசெய்து இருக்கும் இடம் விமானநிலையம் அமைய சிறந்த இடம். இந்த இடத்தின் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருவதால், விமானங்கள் பறக்கும் போது பறவைகள் மோதுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா, சரணாலயத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்பது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையும், சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையமும் ஆய்வு செய்ய உள்ளது” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைய இருந்த கிரீண்பீல்ட் விமானநிலையத்தை தமிழக அரசு கைவிட்டு, வேறு இடம் தேர்வுசெய்யக் கோரியது. ஏனென்றால், நிலம் கையப்படுத்தும் செலவு அந்த பகுதியில் மிக அதிகம் என்பதால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், புதிதாக அமைய இருக்கும் விமானநிலையம், முழுமையாக தனியார் பங்களிப்பாக இருக்க வேண்டுமா, அல்லது, அரசு, தனியார் கூட்டாக இருக்க வேண்டுமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று விமானஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமான ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொகாபத்ரா கூறுகையில், “ சென்னையில் 2-வது விமானநிலையம் வரவேண்டுமா என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். 2-வது விமானநிலையம் உருவாக்க குறைந்தபட்சம் 2500 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதில் ஒரு விமான ஓடுதளம், விமானநிறுத்தம் இடங்கள் உருவாக்கப்படவேண்டும்.
அதிகமான ஓடுதளம் உருவாக்குவது என்பது, பயணிகள் வருகை மற்றும் விமானப் போக்குவரத்துக்கு இருக்கும் தேவையைப் பொறுத்து மாறுபடும். நிலம் கையகப்படுத்தும் செலவு அதிகமாக இருந்தால், மாநில அரசு மாற்று இடங்களை ஒதுக்கலாம். மாநில அரசு நிலத்தை ஒதுக்கி கொடுத்தவுடன், ராடார், உள்ளிட்ட மற்ற வசதிகள் குறித்து விமான ஆணையம் முடிவு செய்யும்.
விமானநிலையத்தை எப்படி மேம்படுத்தப்போகிறோம் என்பதை மாநில அரசு தீர்மானிக்க வேண்டும். விமானநிலையம் அமைக்க 2 இடங்களை காட்டுங்கள் என்றுதமிழக அரசிடம் இந்திய விமான ஆணையம் கேட்டுள்ளது. இதில் சிறீபெரும்புதூர் அருகே இருக்கம் இடம் மிகவும் விலை அதிகமானது எனக்கூறிவிட்டது. நிலம் தயாராக இருந்தால், விமானநிலையம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்
