சென்னை சைதாப்பேட்டை கே பி கோவில் தெருவில் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஹேமலதா. அண்ணா பல்கலை கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சண்முகம் மறைந்து விட்டார். ஹேமலதாவிற்கு ஜெயலெட்சுமி மற்றும் பாலமுருகன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகன் பால முருகன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இன்று வீட்டில் ஹேமலதா தன் மகள் ஜெயலெட்சுமியுடன் தனியாக இருந்துள்ளார்.

மகள் ஜெயலெட்சுமி தன் அறையில் இருந்துள்ளார். ஹேமலதா ஹாலில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்துள்ள மர்ம நபர்கள் ஹேமலதாவை முதலில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த ஜெயலெட்சுமியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இருவரும் இறந்து விட்டதை உறுதிபடுத்திய பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மோப்ப நாய்கள் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. ஹேமலதா மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பணத்திற்காக கொலை நடத்திருந்தால் வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதால் வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது சொத்து தகறாரா கள்ள தொடர்பு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலை சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.