Asianet News TamilAsianet News Tamil

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் நிறுத்தம்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Annamalai condemns tn govt on its decision to stop Aavin Green milk packet  smp
Author
First Published Nov 20, 2023, 3:43 PM IST | Last Updated Nov 20, 2023, 3:43 PM IST

பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவுக்க்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். 

ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில் பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம்.

இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. 

 

 

மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால்  கொள்முதல் செய்து, 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க ஆளுநர் ரவி ஒப்புதல்!

ஆவின் நிறுவனம் கொழுப்புச் சத்துகளுக்கு ஏற்ப சமன்படுத்தப்பட்ட பல்வேறு வண்ண பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் பச்சை நிற பாக்கெட்டுக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், பச்சை நிற பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வருகிற 25ஆம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனையை ஆவின் நிர்வாகம் நிறுத்தவுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios