திருச்சியில் ஒரு ரூபாய் தோசை அதுவும் அதற்கு அண்ணாத்த தோசை என்று பெயரிட்டு கலக்கி இருக்கிறார் ரஜினி ரசிகர்.

திருச்சி: திருச்சியில் ஒரு ரூபாய் தோசை அதுவும் அதற்கு அண்ணாத்த தோசை என்று பெயரிட்டு கலக்கி இருக்கிறார் ரஜினி ரசிகர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சினிமாவையும், அரசியலையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோன்று தான் சினிமாவையும் மக்களையும் பிரிக்க முடியாது. சினிமா வழியே அரசியல் கருத்துகளை பரப்பிய மண் தமிழகம்.

சினிமா அரசியலும் பேசியது.. அரசியலில் சினிமாவும் பேசப்பட்டது. அப்படிப்பட்ட பரப்புரை ஆயுதமான சினிமாவில் தோன்றும் நட்சத்திரங்களை தங்களின் ஆத்மாவாக இன்றும் நினைக்கும் ரசிகர்கள் உண்டு.

ரசிகர் மன்றங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி தனது கதாநாயகனுக்கு, தமக்கு பிடித்த நடிகருக்கு எதையாவது எப்போதாவது செய்து கொண்டிருப்பது தமிழ்பட ரசிகர்களுக்கு ஆக விருப்பமான விஷயம்.

தமக்கு பிடித்தவர்கள் கதாநாயகர்கள் என்று இல்லை, கதாநாயகியாகவும் இருப்பார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் குஷ்பு. குஷ்புக்கு கோயில் கட்டி ஊரான தமிழகத்தில் இட்லிக்கு குஷ்பு என்று பெயர் வைத்ததும் நடந்திருக்கிறது.

இப்படி தமக்கு பிடித்த கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும் ஒவ்வொரு தருணமும் தான் ரசிகர்களுக்கு திருவிழா தான். அந்த நாளுக்காக அவர்கள் படம் அறிவித்த தருணத்தில் இருந்ததே காத்திருப்பார்கள்…. கண்கள் பூத்திருப்பார்கள்.

முன்னணி நடிகர்களை தெய்வமாக வழிபடும் ரசிகர்கள் உள்ள தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்றளவும் எளிமையாக இருந்தாலும் தமது நடிப்பில் அசத்தி வரும் அவர்களின் ரசிகர்கள் பட்டாளம் பெரியது, எவ்வளவு என்று கணக்கும் பார்க்க முடியாது.

ஒவ்வொரு முறையும் ரஜினியின் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது கொண்டாடி தீர்ப்பார்கள். அப்படி ஒரு தங்கமான வாய்ப்பு ரஜினிகாந்த் ரசிர்களுக்கு நீண்ட நாட்கள் அல்ல…. ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீபாவளி தருணத்தில் அமைந்திருக்கிறது.

அவரின் அண்ணாத்த படம் வரும் தீபாவளியன்று ரிலீசாகிறது. பக்கா கிராமத்து ஸ்டைலில் கலக்கலாக படம் வந்திருப்பதாகவும், படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றும் திரையுலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட தருணத்தில் ரஜினி ரசிகர் ஒரு அமர்க்களமான காரியம் ஒன்றை செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அந்த ரசிகரின் பெயர் கர்ணன்.

திருச்சியை சேர்ந்தவர். தீவிர ரஜினி ரசிகர். திருச்சி ராம்ஜி நகரில் உணவகம் நடத்தி வருகிறார். அண்ணாத்த படத்தை வரவேற்கும் பொருட்டு 30 ரூபாய் மதிப்புள்ள ஒரு தோசையை 1 ரூபாய்க்கு விற்று ரசிர்களையும், மக்களையும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

படம் வேற லெவலில் வந்திருப்பதாக அனைவரும் கூறுகின்றனர் என்ற ரசிகர் கர்ணன், அண்ணாத்த படம் நிச்சய வெற்றி தான் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

நாளை தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விடும் என்பதாலும், 4ம் தேதி தீபாவளி என்பதாலும் இன்று ஒருநாள் மட்டுமே இந்த சலுகையை கொடுக்க முடிந்ததாகவும் கூறியிருக்கிறார் ரசிகர் கர்ணன்.

கர்ணன் என்ற பெயரை போல அனைவருக்கும் 1 ரூபாய்க்கு தோசை வழங்கிய அவரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வாழ்த்தி உள்ளதோடு பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளனர்.