திருப்பூர்

‘நீட்’ தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்று திருப்பூர் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, சமூகநீதி மாணவர் இயக்கத்தின் சார்பில் நேற்று திருப்பூர் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால்

திருப்பூர் இரயில் நிலையம் முன்பு ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

முஸ்லிம் அமைப்பினரின் இந்த அறிவிப்புபடி காதர்பேட்டை பகுதியில் இருந்து ஏராளமான முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைகளில் கொடிகளை ஏந்திக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அவர்கள் இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் அவர்களை இரயில் நிலையத்தின் வெளியிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இரயில் நிலைய வாசலை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பினர் அங்கேயேப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்த போராட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் ஹாலிதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பைசுல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அஸ்கர் அலி, மாவட்டப் பொருளாளர் முத்துமீரான், மாணவர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஷேக் முகமது, மாணவர் அணி மாவட்டப் பொருளாளர் காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், “மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராகவும், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பிற்கான இடத்தை ஒதுக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் ஏராளமானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தங்களது தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.