திருவாரூர்,
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் உமா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சௌந்தரராஜன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் “அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பாக 20 சதவீத ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தையொட்டி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர்.
இதில் ஊரக வளர்ச்சி துறை மாநில செயலாளர் புஷ்ப நாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவ நாதன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தரம், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணை தலைவர் பழனிவேல், சங்க நிர்வாகி பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
