பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 தினங்கள் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான அன்புமணி விளக்கம்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அபோலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான அன்புமணி இன்று காலை அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார்.
இந்நிலையில் ராமதாஸ் உடல்நிலை தொடர்பாக அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்த ஐயா ராமதாஸ்க்கு எப்பொழுதும் போல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது இதயத்தில் உள்ள ரத்த குழாயில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் இதயத்தில் எந்தவித அடைப்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் நலமுடன் இருக்கார்.
ஆனால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை தற்போது வரை சந்திக்க முடியவில்லை. பிற்பகலுக்கு பின்னர் அவர் ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது. மேலும் அவர் அடுத்த 2 தினங்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
