Asianet News TamilAsianet News Tamil

ஈசிஆர் பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவியுங்கள்! ஹெலிகாப்டர் சுற்றுலாவை தடை செய்யுங்க- அன்புமணி

கோவளம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் தாங்க முடியாத இரைச்சலுடன் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல அரசு எவ்வாறு அனுமதிக்கிறது?  என்பது தெரியவில்லை. இதன் மூலம் பறவைகளுக்கு பெரும் தீமையை தமிழக அரசு இழைக்கிறது என அன்புமணி தெரிவித்துள்ளார். 

Anbumani requested to declare the ECR area as a protected bird habitat KAK
Author
First Published Jan 21, 2024, 2:02 PM IST | Last Updated Jan 21, 2024, 2:02 PM IST

ஈசிஆரில் பறவைகள் வாழ்விடம்

சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள்  வலசை வந்து செல்வதால் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டமும், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமும் ஏரிகளுக்கு பெயர் பெற்றவை.

 நீர் நிறைந்த ஏரிகளும், அவற்றையொட்டிய தாவரங்கள் நிறைந்த பகுதிகளும் அப்பகுதிகளை பறவைகள் வாழிடமாக மாற்றியுள்ளன. இந்தச் சூழலுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கடலுடன் இணைந்திருக்கும் உப்பங்கழிகள், காப்புக்காடுகள் ஆகியவை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியை பறவைகளுக்கு சொர்க்கபுரியாக மாற்றியிருக்கின்றன. ஆனால், இந்த சூழல் வேகமாக சீரழிந்து வருவது கவலையளிக்கிறது.

Anbumani requested to declare the ECR area as a protected bird habitat KAK

சதுப்பு நிலம் - பறவைகளுக்கு வரம்

முட்டுக்காட்டில் தொடங்கி கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி கேளம்பாக்கம் உப்பங்கழி என்றழைக்கப்படுகிறது. கைவிடப்பட்ட உப்பளங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் பொரி மீன்கொத்தி, சாம்பல் கூழைக்கடா, நீர்க்காகம், சாதா உள்ளான், குளக்கொக்கு,  உப்புக் கொத்திகள், ஆலா (Pied Kingfisher, Spot-billed Pelicans, Cormorants, Common Sandpipers, Pond Herons , Plovers, Terns)உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. அதிகாலை வேளையில் இப்பகுதியிலும், கிழக்கு கடற்கரையிலும் இவற்றின் நடமாட்டத்தை காண்பதே பேரானந்தமாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதையொட்டிய பெரும்பாக்கம் சதுப்பு நிலம் ஆகியவை பறவைகளுக்கு  பெரும் வரம் ஆகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது; ஒரு பகுதி குப்பை மேடாகி விட்டது என்றாலும் கூட அங்கு வெளிநாட்டு பறவைகள் வருவது குறையவில்லை. 

Anbumani requested to declare the ECR area as a protected bird habitat KAK

பல வகையான பறவைகளின் வாழ்விடம்

பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு ஆகிய அனைத்து தீமைகளும் இருந்தாலும் கூட அவற்றை சகித்துக் கொண்டு யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து,  ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் (Eurasian Eagle  Owl, Pied Avocet, Northern Shoveler, Eurasian Wigeon, Northern Pintail, Eurasian Spoonbill, Purple moorhen, Night heron, Little Cormorant, Common Coot, Yellow bittern, Black-winged Stilt) ஆகிய பறவைகள் அதிக அளவில் வந்து இந்த சதுப்பு நிலங்களுக்கு அழகும், பெருமையும் சேர்க்கின்றன.

Anbumani requested to declare the ECR area as a protected bird habitat KAK
10ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து வரும் பிளமிங்கோ பறவை

இவை தவிர்த்து கிழக்குக் கடற்கரை சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பிளமிங்கோ பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. வேடந்தாங்கல் சரணாலயத்திற்குக் கூட செல்லாத பிளமிங்கோ பறவைகள் பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவை கடந்து கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும். பறவைகள் வருகைக்கு ஏற்ற இந்த சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டிய பல பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பதை பல தருணங்களில் நானே பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும்.  ஆனால்,  இந்தக் கொடையை தக்கவைத்துக் கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதை அழிப்பதற்கான செயல்கள் தான் அதிக அளவில் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.

Anbumani requested to declare the ECR area as a protected bird habitat KAK

ஹெலிகாப்டர் சுற்றுலாவை தடை செய்யுங்கள்

இவை அனைத்திற்கும் மேலாக கோவளம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட  ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை பறவைகளின் வருகைக்கு முற்றிலுமாக முடிவு கட்டிவிடும் ஆபத்து உள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலில் பட்டாசு வெடிக்கவே  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவளம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் தாங்க முடியாத இரைச்சலுடன் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல அரசு எவ்வாறு அனுமதிக்கிறது?  என்பது தெரியவில்லை.

இதன் மூலம் பறவைகளுக்கு பெரும் தீமையை தமிழக அரசு இழைக்கிறது. வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறை பயன்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும்  ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை  ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அன்புணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

விடுமுறையில் குடும்பத்தோடு கோவாவை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு.. இவ்வளவு கம்மி விலை தானா..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios