கொள்ளிடம் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில்  பாமகவே அந்த பணியை செய்யும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், ,மக்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் வீணாவதை தடுப்பதற்கான தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த மறுப்பது தான் என குற்றம்சாட்டியுள்ளார்.

நிலத்தில் ஓடும் கடல் என்று போற்றப்படும் கொள்ளிடம் ஆற்றைக் கொண்டு தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக கொள்ளிடக் கரையோர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார்.

காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது திறந்து விடப்படும் தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்காக 110 கி.மீ நீளம் கொண்ட கொள்ளிடத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் குறைந்தபட்சம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்..

கொள்ளிடத்தில் பல இடங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியாக கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் நுழைந்து வருகிறது. கொள்ளிடம் கடலில் கலக்கும் பகுதியில் தடுப்பணை கட்டி இதைத்தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழக அரசு ஏற்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்..
.
இன்னும் ஒரு மாதத்தில் தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாவிட்டால் மக்களின் ஆதரவுடன்  தடுப்பணை கட்டும் பணியை பாட்டாளி மக்கள் கட்சியே தொடங்கும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.