Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளை கவலையில் ஆழ்த்திய தமிழக அரசின் அறிவிப்பு.. திரும்ப பெற அன்புமணி ராமதாஸ் ட்வீட்..

வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பருத்தியை மீண்டும் சேர்க்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss tweet
Author
Tamil Nadu, First Published Dec 16, 2021, 4:37 PM IST

தமிழ்நாடு வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் சட்டத்தின்கீழ் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் அதிகம் விளையும் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அல்லது அதன் உற்பத்திப் பொருளுக்கு தகுந்த விலை கிடைக்க இதன்மூலம் வழிவகை செய்யப்படுகிறது.

அந்தவகையில் திருவாரூர் ,நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருத்தி அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் விதை நீக்கப்பட்ட பஞ்சு, கழிவுப் பஞ்சு ஆகியவற்றிற்கு சந்தை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இரண்டு மாத இடைவெளியில் விதையுள்ள பஞ்சிற்கும் சந்தை கட்டணத்திலிருந்து  விலக்கு அளித்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Anbumani Ramadoss tweet

நெல், நிலக்கடலைக்கு அடுத்தபடியாக பருத்தி மூலமாக தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்த நிலையில் தமிழ்நாடு வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நூலிழைகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த பருத்தியை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பருத்தியை மீண்டும் சேர்க்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பருத்தி இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை உழவர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். 

Anbumani Ramadoss tweet

மேலும் தமிழ்நாட்டில் பருத்தியைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், கொள்முதல் செய்யும் பருத்தியின் மதிப்பில் 1 சதவீதத்தை சந்தைக் கட்டணம் செலுத்துவதற்கு விலக்களிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பருத்திக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். அதனால், வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் பருத்தியை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் பருத்திக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பருத்தியைத் தமிழக அரசே கொள்முதல் செய்ய தமிழ்நாடு பருத்திக் கழகம் என்ற நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios