Asianet News TamilAsianet News Tamil

சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் காவல்துறையினருக்கு போதிய ஊதியம் வழங்காதது சோகமும், துரோகமும் ஆகும்- அன்புமணி

குடும்பத்தினரை பல நேரங்களில் பார்க்க முடியாமல், குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பணிக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் சோகமும், துரோகமும் ஆகும் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

Anbumani demands to increase the salary of the police KAK
Author
First Published Oct 20, 2023, 11:44 AM IST

காவலர்களுக்கு ஊதிய உயர்வு

இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக தங்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக காவல்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் எந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒப்பீட்டளவில் காவலர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.  இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்; காவலர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி  10ஆம் வகுப்பு என்பதால், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை காவலர்களுக்கும் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக காவலர்கள் கோருகின்றனர்.

Anbumani demands to increase the salary of the police KAK

 கோரிக்கை நிறைவேற்றவில்லை

திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாய்மொழியாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தக் கோரிக்கை ஆய்வுக்குக் கூட எடுக்கப்படவில்லை. காவலர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய பயணப்படி, மிகை நேரப்படி ஆகியவை கடந்த 3 மாதங்களாக பல மாவட்டங்களில் வழங்கப்படவில்லை.

25 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர்களுக்கு அடையாள அட்டை, செல்பேசிக்கான சிம் ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை. காவலர்களுக்கு வார விடுப்பு வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாலும் கூட பல மாவட்டங்களில் அது நடைமுறையில் இல்லை. காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், அவர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கும் நிலையில்,  

Anbumani demands to increase the salary of the police KAK

காவர்கள் உரிமைகள் பறிப்பு

அவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்படாததால், அவர்கள்  குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்; ஆட்சியாளர்கள் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் காவல்துறையினர் தான். அவர்கள் கடமையை சரியாக செய்யவில்லை என்றால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது; தமிழ்நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். 

அந்த அளவுக்கு முக்கியமான பணியை செய்து வரும் காவலர்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு, போற்றப்பட வேண்டும். ஆனால், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில்லை. தமிழக அரசுப் பணியாளர்களில் சபிக்கப்பட்டவர்கள் என்றால் காவலர்கள் தான். நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் எதுவுமின்றி அழைக்கப்படும் போதெல்லாம் ஓடி வந்து பணி செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆட்சியாளர்களின் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டால் பல நேரங்களில்  இரு நாட்களுக்கு, இயற்கை அழைப்புகளுக்குக் கூட இடம் கொடுக்காமல் சாலையோரங்களில் விழிப்புடன் காவல் காக்க வேண்டும். 

Anbumani demands to increase the salary of the police KAK

சோகமும், துரோகம்- அன்புமணி

குடும்பத்தினரை பல நேரங்களில் பார்க்க முடியாமல், குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பணிக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் சோகமும், துரோகமும் ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விடுப்பு உள்ளிட்ட காவலர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள்- சீறும் சிபிஎம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios