மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் நிர்பந்தத்தால் நிகழ்ந்தது என்று அதிகாரிகள் கூறுவது பொய்யானது என்றும் பொய்யான தகவலை அளித்தவர்கள் மீது வழக்கு முடிந்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

மதுரை கமாராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை நியமனத்துக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து, மதுரை, எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து துணை வேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்களான ஹரீஷ் மேத்தா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் நிர்பந்தத்தால் மட்டுமே துணைவேந்தரைத் தேர்வு செய்தோம் என்று கூறியிருந்தனர். இதற்கு, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், நிர்பந்தத்தால் நிகழ்ந்தது என்று அதிகாரிகள் கூறுவது பொய்யானது என்றார். நியமனத்தில் தேர்வுக்குழு தலையீடு இருந்ததாகக் கூறும் தகவல் தவறானது என்றும், தவறான, பொய்யான தகவல்கள் அளித்தவர்கள் மீது வழக்கு முடிந்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் கூறினார்.