Amni bus hits lorry with terrible Two died in the spot
கடலூர்
அதிகாலையில் கடலூர் அருகே வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, லாரி மீது பயங்கரமாக மோதியதில் ஓட்டுநர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இராமநாதபுரம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை கோயம்புத்தூர் ரத்தினாபுரியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் உதவியாளராக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் (25) என்பவர் வந்தார். பேருந்தில் மொத்தம் 38 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில், ஆம்னி பேருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தின் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, பேருந்துக்கு முன்னால் லாரி ஒன்று சென்றது. திடீரென ஆம்னி பேருந்து, லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது.
இதில், இடிபாட்டிற்குள் சிக்கி பலத்த காயமடைந்த ஓட்டுநர் கமலக்கண்ணன், உதவியாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமகா பலியானார்கள்.
மேலும், பயணிகளான திருநெல்வேலி மாவட்டம், நல்லாங்குளத்தை சேர்ந்த செல்வராஜ் (30), சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்வகுமார் (38), சென்னை வலசரவாக்கம் மைக்கேல் (70), இவருடைய மனைவி வனிதா (63), முகப்பேர் முருகன் (53) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த, வேப்பூர் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கமலக்கண்ணன், சக்திவேல் ஆகியோரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்தில் சிக்கிய பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
