ஈரோடு

ஈரோட்டில் 134 பெண்களுக்கு ரூ.33½ இலட்சம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.

அம்மா ஸ்கூட்டர்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மானியம் கேட்டு விண்ணப்பித்த பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்று பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் 134 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வீதம் மொத்தம் ரூ.33 இலட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதில் திருப்பூர் சத்தியபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன், முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிசந்திரன்,

மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் மண்டல தலைவர் மனோகரன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜ், ஜெயராஜ், முருகுசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். விழாவின் இறுதியில் உதவி திட்ட அதிகாரி சாந்தா நன்றித் தெரிவித்தார்.