மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்பு பல மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் 70 சதவீத பகுதி பா.ஜனதா ஆளுகையின் கீழ் வந்துவிட்டது.

தென் மாநிலங்களில் பாஜகவினால் கால்பதிக்க முடியாவிட்டாலும், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கின்றன. இதனால் ஆட்சி மாற்றத்துக்கான தனது திட்டத்தை கைவிட்டு கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தீவிரமாக இறங்கியுள்ளார்.

முதலில் தமிழகத்தில் கட்சி கூட்டங்களில் பங்கேற்று தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதற்காக ஆகஸ்ட் 22ம் தேதி,அமித்ஷா சென்னை வருகிறார். சென்னை, கோவையில் 3 நாட்களும், காரைக்குடியில் 2 நாட்களும் சுற்றுப்பயணம் செய்து கட்சி கூட்டங்களில் பேசுகிறார்.

ஏற்கனவே அமித்ஷா மே மாதம் தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. மே மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் அமித்ஷாவும் தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.