“பிளிப்கார்ட்,அமேசானுக்கு தடை… விரைவில் டெல்லியில் போராட்டம்…” விக்கிரமராஜா எச்சரிக்கை !
“அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் டெல்லியில் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்து இருக்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.
நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ மத்திய அரசு ரெடிமேடு சட்டைகளுக்கான ஜி. எஸ். டி. வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த அனுமதி அளித்து உள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய நிதி மந்திரியை சந்திக்க உள்ளோம். இதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1, 000 வரை விலை உயர்ந்து உள்ளது.
இதனால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். வணிக உபயோகத்திற்கான சிலிண்டர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும். கொரோனா காலத்தில் உயிரிழந்த 142 வியாபாரிகளில் மிகவும் நலிவடைந்த 32 வியாபாரிகளின் பட்டியலை முதல்-அமைச்சருக்கு வழங்கி உள்ளோம். கொரோனா தொற்றின் நிலைமை சரியானவுடன் இழப்பீடு வழங்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மழைக்காலங்களில் தக்காளி விலை உயர்வு இயல்பு தான். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து இல்லை என்பதால் விலை உயர்ந்து உள்ளது. சத்தீஸ்கார் மாநிலத்தில் இருந்து தக்காளி குறைவான வாகனங்களில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் ஆகும். ஆனால் அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அதிக வாகனங்களில் தக்காளி கொண்டு வரப்பட்டதால் தக்காளி விலை குறைந்துள்ளது.
தை மாதத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும். அப்போது காய்கறிகளை வாங்க ஆள் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் அரசு குறைவான விலைக்கு காய்கறிகளை வாங்கி, குளிர்பதன கிடங்குகளில் சேமித்து, இதுபோன்ற விலை உயர்வு ஏற்படும் காலங்களில் குறைவான விலைக்கு விற்பனை செய்யலாம். வெளிநாட்டில் உள்ள ஆன்லைன் நிறுவனங்கள் நமது நாட்டில் கால் பதித்துள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் செய்ய இருக்கிறோம். இதனை எதிர்த்து ஏற்கனவே டெல்லியில் போராடி உள்ளோம். மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்’ என்று கூறினார்.