க.பரமத்தி,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமராவதியில் இருந்த்உ திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டத்தின் எல்லையைக் கூட தொடவில்லை என்று கூறி பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூரை அடுத்த செல்லாண்டிபாளையம், பள்ளபாளையம், தாதம்பாளையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன் திரளாக கூடினர்.

நேற்று காலை 10 மணிக்கு கரூர் – தாராபுரம் சாலை செல்லாண்டிபாளையம் பிரிவு பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியவை:

“இந்த ஆண்டு மழைப் பொய்த்துப் போனதால் விவசாய பயிர்கள் முழுவதும் காய்ந்து போயின. இந்த நிலையில் எங்கள் பகுதியில் தற்போது அதிக அளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது கிணறுகளில் கூட தண்ணீர் இல்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டத்தின் எல்லைக்குக் கூட வரவில்லை. எனவே குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அதாவது பள்ளபாளையம் வரும் வரை தண்ணீர் திறக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காகவே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமராவதி ஆற்று பாசன பொறியாளர்கள் சரவணன், புகழேந்தி, தாசில்தார் அம்பாயிரநாதன், காவல் துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் கரூர் – தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.