Allows any company to take hydrocarbon know - Exposed the BJPs plan
தமிழகத்தில் தற்போது உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பாரதிய ஜனதா கட்சி மறைமுகமான ஆதரவை அளித்து வருவது அம்பலமாகி உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கும் ஜெம் லேபரெட்ரீஸ் நிறுவனம் கர்நாடகத்தின் பாரதியஜனதா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.எம். சித்தேஸ்வராவுக்கு சொந்தமானது என்பது இப்போது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசு ஜெம் லேப்ரெட்ரீஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் ஜி.எம். நிறுவனம் என்பது முன்னாள் மத்திய அமைச்சர் சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமாகும். சித்தேஸ்வரா மட்டுமல்ல அவரின் குடும்பமே தீவிர பாரதிய ஜனதா விசுவாசிகள். அதனால், தான் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டத்தை கர்நாடக மக்களிடம் சத்தமில்லாமல் பாரதியஜனதா வழங்கியுள்ளது.
சித்தேஸ்வராவின் தந்தை ஜி. மல்லிகார்ஜூனப்பா. கர்நாடக பாரதியஜனதா அரசியல் வட்டாரத்தில் மிகப்பிரபலம். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜி.மல்லிகார்ஜூனப்பா
சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தீவிர ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகி, பின்னர் பாரதியஜனதா கட்சியில் மல்லிகார்ஜூனப்பா இணைந்தார்.
கர்நாடகத்தின் தாவணகரே தொகுதியில் போட்டியிட்டு இரு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகத்தில் ஜி.எம். நிறுவனக்குழுமங்கள் என்றால் அனைவருக்கும் அத்துப்படி.
கல்வி, விவசாயம், சர்க்கரை ஆலை, மின்சார உற்பத்தி, வங்கி, ஏற்றுமதி, இறக்குமதி என மல்லிகார்ஜூனப்பாவுக்கு இல்லாத தொழில்களே இல்லை. மேலும், பாக்கு தொழிலும் இவர் தொடக்கத்தில் இருந்து ஈடுபட்டு வந்ததால், பாக்கு மன்னன் என்ற புனைப்பெயரும் உண்டு. அனைத்து துறைகளிலும் மல்லிகார்ஜூனப்பா தடம் பதித்தார்.
இவரின் நிறுவனங்களை இப்போது 3 மகன்கள்தான் நிர்வாகம் செய்து வருகின்றனர். இதில் மூத்தவர் சித்தேஸ்வரா, இளையவர் லிங்கராஜூ ஆகியோர் நிர்வகிக்கும் நிறுவனமே ஜி.எம். லேப்ரெட்ரீஸ். இந்த நிறுவனம்தான் நெடுவாசலை அழிக்கத் துடிக்கிறது.
தந்தை வழியே தனது வழி என்ற கணக்கில், சித்தேஸ்வராவும் தனது தந்தை தொகுதியான தாவணகரே தொகுதியில் போட்டியிட்டு 3-வது முறையாக எம்.பி.யாக இருந்து வருகிறார். எடியூரப்பாவுக்கு மிகவும் விசுவாசியான இவர் பாரதியஜனதா மேலிடத்துக்கு மிகவும் நெருக்கமானவர்எனக் கூறப்படுகிறது.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்பு காட்டியவுடன் பாரதியஜனதா கட்சி, அந்த உரிமத்தை ஜெம் நிறுவனத்துக்கு வழங்கியது.
இதுநாள்வரை ஜெம் நிறுவனம் தனியார் நிறுவனம் என்று மட்டுமே அறிந்து வந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு பலமான பாரதியஜனதா கட்சியின் ஆதரவு இருப்பது இப்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாரதியஜனதா மூத்த தலைவர் இல கணேசன், நாட்டின் நலனுக்காக தமிழகத்தை தியாகம் செய்வதில் தவறில்லை என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுத்து வரும் எதிர்ப்பை பாரதியஜனதா கட்சியின் சில குறிப்பிட்ட தலைவர்கள் மிகவும் உதானசீனப்படுத்தும் விதத்திலும் சமீபகாலமாக பேசி வருகின்றனர்.
காவிரியில் இருந்து உரிய நீரைத் தராமல் ஏமாற்றி டெல்டா பகுதியை ஏறக்குறைய பாலைவனமாக மாற்றிவிட்டதில் கர்நாடகத்துக்கு பெரும் பங்கு உண்டு. இப்போது போதாகுறைக்கு, அந்த மாநிலத்தின் நிறுவனத்தையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கொடுத்து ஒட்டுமொத்தமாக டெல்டா பகுதியை பாலைவனமாக்க பாரதியஜனதா அரசு முடிவு செய்துள்ளதுபோல தெரிகிறது.
